Wednesday, December 14, 2016

திருப்பாவையில் திவ்ய தேசங்கள் :

திருப்பாவையில் திவ்ய தேசங்கள் :
அரசிளம் குமரர்கள் உணவில் பிடிதோறும் நெய் சேர்க்குமா போலே , திருமங்கை ஆழ்வார் 
தம் பாசுரங்களில் அடிதோறும் அர்ச்சை சேர்ப்பார் என்பது பூர்வாச்சார்ய வசனம்.

அதுபோலே ஆண்டாள்தன் திருப்பாவையில், அவள் நினைத்தோ நினையாமலோ பல 
திவ்யதேச எம்பெருமான்கள் அந்தந்த பாசுரங்களை தந்தமக்கு ஆக்கிக் கொண்டமை 
நேர்த்தியோடு பொருந்தி வருவதும், தமிழ் பிரமாணங்கள் பின்னே அவ்வவ் எம்பெருமான்கள் 
செல்வார்கள் என்பதற்கு சிறந்த எடுத்துக் காட்டு இதோ :
மார்கழித் திங்கள் - நாராயணனே நமக்கே பறை  தருவான் - பரமபதம்.
வையத்து - பாற்கடலில் பையத் துயின்ற - க்ஷீராப்தி.
ஓங்கி - ஓங்கி உலகளந்த உத்தமன் - திருக்கோவலூர்.
ஆழிமழை  - பாழியம் தோளுடை பத்மநாபன் - திரு அனந்தபுரம் .
மாயனை - வடமதுரை மைந்தன் - மதுரா .
புள்ளும் - வெள்ளத்தரவில் அமர்ந்த வித்து - திருவண் வண்டூர்.
கீச்சு கீச்சு - கேசவனைப் பாடவும் - திருவாய்ப்பாடி.
கீழ்வானம் - தேவாதி தேவனை சென்று நாம் சேவித்தால் - பெருமாள் கோயில், காஞ்சி
தூமணி மாடம் - குன்றின்மேல் விளக்கு - திருக் கடிகை.
நோற்று சுவர்க்கம் - நாற்றத் துழாய்முடி நாராயணன் - திருக்காட்கரை.
கற்றுக் கறவை - முகில் வண்ணன் பேர் பாட - காளமேகப் பெருமாள் திருமோகூர்.
கனைத்திளம் - தென் இலங்கை கோமானை சேற்ற மனத்துக்கு கினியான்  - தில்லை திரு சித்திர கூட்டம்.
புள்ளின்வாய் - பள்ளிக் கிடத்தியோ - திருக்குடந்தை.
உங்கள் புழக்கடை - நாவுடையாய் - செந்தமிழும் வடுக்கலையும் திகழ்ந்த நாவர்  - தேரழுந்தூர்.
எல்லே - மாற்றாரை மாற்றழிக்க வல்லான் மாயன் - திருவல்லிக்கேணி.
நாயகனாய் - மாயன் மணிவண்ணன் - திருக்குறுங்குடி.
அம்பரமே - அம்பரமூடறுத்து ஓங்கி உலகளந்த உம்பர் கோமான் - சீர்காழி.
உந்து மத களிறு - பந்தார் விரலி மைத்துனன் - திருநறையூர்.
குத்து விளக்கு - மலர்மார்பா - திருவிடவெந்தை.
முப்பத்து மூவர் - செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலன் - திருப்பாடகம்.
ஏற்ற கலங்கள் - ஊற்றமுடையாய் பெரியாய் - பெரும்புறக் கடல் - திருக்கண்ண மங்கை.
அங்கண்மா ஞாலம் - அரசர் அபிமான பங்கமாய் வந்து தலைப்பெய்து - திருமாலிருஞ் சோலை.
மாரி மலை முழஞ்சில் - பூவை பூ வண்ணா - திருவரங்கம்.
அன்றிவ் உலகம் - குன்று குடையாய் - கோவர்த்தனம்.
ஒருத்தி - கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமால் - திருக்கண்ண புரம்.
மாலே மணிவண்ணா - ஆலின் இலையாய் - வடபெரும்கோயில் (ஸ்ரீ வில்லி புத்தூர்).
கூடாரை வெல்லும் - சீர் கோவிந்தா - திருவேங்கடம்.
கற்றுக் கறவை - குறை ஒன்றுமில்லாத கோவிந்தா - விருந்தாவனம்.
சிற்றம் சிறுகாலை - பறை கொள்வான் கோவிந்தா - துவாரகை.
வங்கக் கடல் - அணிபுதுவை - ஸ்ரீவில்லி புத்தூர்.
-- P B அண்ணங்கராச்சாரியார் ஸ்வாமி தொகுத்ததில் எடுத்தது.


Sunday, December 11, 2016

ஆசுகவி 3

முகநூல் மலர்ந்த ஆசுகவி 3

301. ராக்ஷஸ்யதி இதி மஹா விஸ்வாச :      


கண்ணமங்கை யுள்நாய் இரண்டு புரண்டுகடி 
யுண்ண, அவைக்குடையார் சண்டையுள் -- மாண்டது 
கண்டு திருக்கண்ண மங்கைஆண் டான்செயல்  
விண்ட தளவே முயல்!

கூறு சமயம் ஆறும் கொள்கைத்தால் : 

கொள்கலம் கோயிலானால் அங்கு கடவுள்,நீர் 
கொள்கலம் ஏதோ அதனுருக்  -- கொள்தல்போல் ; 
நால்வகை தெய்வம் நமக்குள்ளாம் ஏனென்றால் 
நூல்வகை நோற்பார் மனத்து!

ஆலயம் தொழல் சாலவும் நன்று :

பசுவின் உடலனைத்தும் பால்பெருகி னாலும் 
பசுவின் முலைக்காம்பு கொண்டே -- நசையும்பால் 
நாம்பெறலால் எல்லா இடத்தும் இறைஉண்டால் 
போம்கோயில் நோற்றல் பொருட்டு!

அவனுக்கே பித்தராமவர்க்கு மற்றையார் முற்றும் பித்தரே:

பித்தன் எனப்பலர் பேச இளையாது;
அத்தன்! அன்பன்! மாலவன்  -- நித்தம் 
பழகி அழல்வாய் மெழுகென் உருகாதே  
வாழலின் சாதலுமாம் மேல்!

அத்வேஷமாத்ர அதிகாரம் :

தன்னை அடைய தவமியற்ற வேண்டாமாய் 
உன்னை அவனின் அகலாதே -- முன்னைப் 
பழவினைப் பால்நெருநல் கூட்டின போக்கி 
தொழம்வினை ஒன்றும்மா லுக்கு !

அஹமேவ பரம் தத்வம் :

நின்றவாற்றால் தன்னதே  இவ்வுலகும் வாழுயிரும்
என்றுஇவன் காட்டும்இத் தோற்றம்தான் -- நன்றுநன்று!
கச்சிக் கிறைகழல் சேர்ப்ப வினைமுற்றும்
மிச்சப் படாதுவேம் காண் !

 நம்நலம் அவன் கைகாட்டு :

நமக்கென நாம்தேடும் நன்மை அளவில்
தமக்கென மேன்தேடும் தன்மை -- சுமப்பதால்
நீடு நிலையா தழிவதாம்; அத்தால்
வீடு வரன்அளிப்பான் மாடு.

ஸ்ரக்ஷணே ஸ்வான்வயம் பிரதிபந்தகம் :

கூவி அழைத்தால் கடுதில் கருணையால்
தாவி வருவான் தளராது -- ஆவிகாக்க
முற்றும்மால் கைபார்த்து நோக்குமேல்; அஃதன்றி
தற்காத்துக் கோட வகன்று.

அதிருஷ்டத்தில் அஹம்கரிக்கை அபகிருஷ்டம் :
காய்பூ பழம்கண் டருளலுண் டேல்இறைமுன்
காய்உடைந்து அக்கனியும் தோல்உரிந்து -- வாய்பிளந்து
போகும், மலர்மட்டும் தெய்வப் பதம்சேரல்
ஆகும் மலர்போல்நீ ஏகு.

சரீராவஸானே மோக்ஷம் :

அவ்வுலகம் செல்லாது இவ்வுலகில் இப்பிறப்பில்
மௌவல் நசைஅறுத்து வாழ்வார்க்கு -- பௌவமிதில்
வீடு எனஉரையும் அஞானம் ஒழித்து,மேன்
வீடுமேவல் முக்தியென உள்ளு.

311. அர்த்த பஞ்சகம் :

உயிரும் உயர்நெறியும் உய்வகையும் மற்று
உயர்வாம் இறையும் அவன்சேர் -- பயணத்
தடைவாம் தடையும் அறிந்து உயர
விடையாம் குருவை அடை.

பூதனா வதம் :

மூக்கு உறிஞ்சி முலைஉண் குழவிகண்
தூக்கி விழியாது தன்னுடை -- நாக்கின்
வழியூரும் பாலின் சுவைஒன்றே பாரும்
குழகன்நம் கண்ணனும் ஒன்று.

நிஸ்சாலா பக்திரஸ்து: 

பரந்த உலகில் நிரம்பநீர் கொண்ட
சிறந்த கடல்ஏழ் நதியேலும் -- உயர்ந்த
சாதக பட்சி மழைநாடல் அஃதேபோல்
காதன்மை வேட்டிறையின் பால்!

மித்ரா பாவேந  ஸம்பிராப்த்தம் :

மாஒழிந்து தேர்ஒழிந்து போர்முகத்து நிற்றனாம்
தான்மிகுந்த தன்மை இராவணன் -- போக்கொழிந்த
அற்று இளைப்பாறி மீளவிட்ட நம்ராமன்
மாற்றமும் நட்ப்பதன் பாற்று.

கற்பூர படியேத்தம் :

ரங்கரங்கா என்றஅக் கோஷம்தான் என்,அந்த
ரங்கம் அதனுள் அதிர்ந்து,கண் -- பொங்கிப்
பனிப்ப திருவரங்கத் துள்அடியேன் நின்றிலனாய்
நாணிப் பணிவன் மனத்து.

நம்பிள்ளை :
உலகா ரியன்சொன்ன வாய்மொழி நூல்விளக்கம்
ஆலும் உயிரின் இறைஉணர்-- வேலுமே
போலதாம் அட்டா தசமாறன் மெய்மன
நூலவை கண்கள் அவர்க்கு.

(நம்பிள்ளை திருவாய் மலர்ந்நருளிய ஈடுபெருக்கு வியாக்யானத்தை ஏடுபடுத்திய வடக்கு திருவீதிப்பிள்ளை அவரின் திருக்குமாரர்களான பிள்ளை லோகாசாரியரும், அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரும் அனுகிரகித்த அஷ்டாதச ரஹசியங்கள் மற்றும் ஆசாரிய ஹிருதயம் ஆகிய கிரந்தங்கள் முறையே , போஜன வஸ்து கிராஸன உபயோகிகளான தந்தாவளி பலத்துக்கு ஆலும் வேலும் போலே, பரபக்ஷ நிரஸனத்துக்கு உபயுக்தமான பகவத் ராமாநுஜ விரசித ஸ்ரீபாஷயத்துக்கு உபபிரம்மணங்கள் ஸ்தாநத்திலேயாய், ஸ்வாமி நம்பிள்ளையினுடைய நேத்ர யுக்மங்களுக்கு ஈடானவை என்னத்தகும்).
 

கர்த்ருத்வ, போக்த்ருத்வ தியாகம் : 

நாடக மேடை நடிகன் அவன்செயல்
கூடப் படாதலவே தம்வினையுள்? -- நீடுலகில்
பற்றறுத்தார் ஆற்று மவையும் பொதுநலத்து
உற்றதாயின் சாரா பழி.

பிராட்டி ஸாகாரா உபகாரம் :

வாயும் உலகை மருகால் விழையாதார்
போயதே நோயதாய் தம்தலை -- சாயுதல்
செய்ய பதிவேண்டில்அன்னையவள் தாளேயாய்
உய்ய கதிஉண்டோ வேறு?

அனுமதிப் பிரதானம் :

கோயிலுள் நின்ற சிலைபோல் நுமதகக்
கோயிலுள்ளும் உண்டாம் இறைஅவன் -- வாயின்
மொழியா தகங்கிடந்து ஆற்றுமதும் நீக்கா
தொழிவன் புறம்திரி வார்க்கு!

ஸ்ரீசம் நமாமி :

திருசேர் திருத்தாள் திருமால் உருத்தான்
பொருள்சேர் விருத்தக் கருத்தாம் -- ஒருத்தன்
இருத்தும் மனத்து வருத்தம் ஒழித்து
இருத்தும் விண்ணா டளித்து!

321. மங்களாணி ஸமாப்பதயேத் :

கலியன் பிறந்தான் கடைக்குட்டி யாக;
வலிந்து இருவராய் வந்தவய -- லாலி
மணவாளன் தாள்கடித்து ஆழ்வார் எனவானான்,
பேணல் அவனடியார்க் கென்று!

அழகன்! குமுதவல்லி தன்மணாளன்!மால்அன்பு
ஒழுகல் உவந்து அவனடியார் -- தாழ்தல்
பழகும் இனியான்! இன்று எமக்குத்
தொழவினிய கண்கள் விருந்து!

அறிவார் உயிராவான் :

மனத்திடை மாசுளவா காணக் கிடைத்திலன்
ஊனக்கண் நம்மின் புலன்பால் -- ஞானத்
துறைஇறை அன்புண்டேல் காணல் பொருளாம்
குறையில் அவன்பெருமை கற்று.

வேறு வேறு சமயமும் ஆனான் :

சாருவாகம் சாங்க்யம் இரண்டதும் பௌத்தம்
பிரிதெழு ஜைனம் இவைஐந்தில் -- சேரா
மறையாளர் வேதாந்த நன்நெறி ஆறும்
இறையின்பால் நின்ற பிணக்கு.

தாசாரதி :

மிதிலைச் செல்வி அகமகிழும் தம்பேர்
யாதெனில் தந்தை தசரதன்தன் -- வதுவெனும்
அப்பேர்; அவள்துணை ராமன் உகப்புமே
எப்போதும் மன்னன் மகன்.

மார்கழி நீராட்டம் :

பாவையர் நோன்பு பனிவிழும் காலையில்
பூவையர் கூடி இடைச்சேரி -- ஆச்சியர்
கண்ணனைக் கண்ணாளம் தான்கட்டி கால்பிடிக்க
எண்ணம் உணர்த்தாம் பொருள்.

இருப்பிடம் வைகுந்தம் :

விதேசம் ஆனால்என்? நம்முடை பாரத்
சுதேசம் ஆகில்என்? தூய்நெறி -- ஆதேச
ஆன்மீக வாதி இருப்பிடம் தேவன்வாழ்
பொன்பூமி ஆகுமது தான்.

வாழ்கை நலம் :

மறத்தின்பால் கோடா குலவழி வித்தம்
அறத்தோடாம் ஈகை தரும -- திறத்தோடாள்
மாடு மனையாள் நீடின்பம் இப்பிறப்பில்
கூடினி துய்ப்பார் வரம்.

உயர்தாழ்வு உன்னதம் உன்னால் உனக்கு;
முயல்வார் உயர்வும் செயல்வாய் -- அயரா
துழைப்பார்க்கு காலம் கருத்து கடவுள்
பிழையா துணைசேர்ந்தக் கால்.

வரம் தரும் வி(வ)ரதன் :

செல்வார்க்கு செல்லிடம் காஞ்சி! வரதனே
எல்லாமா கொள்வார்க்கு வேழமலை -- அல்லாது
நில்லாது நெஞ்சம் அரங்கனும் வேண்டிட
நல்குவான் அன்றோ அவன் ?
331. உட்கண் விருந்து :

காண விழைவார்கள் எல்லாரும் கண்ணனைக் 
காணக்கிலார்; காட்சிப் பொருளாய்நாம் -- காண 
காட்டனேலும் உள்ளத்தி னுள்ளே உணர்வின்வாய்   
தொட்டனைத் தூரும் அவன்.

பக்தாங்கிரி ரேணு :
உன்னை உணர்த்தி ''உனக்காள் எனாதேகொள்
உன்தன் அடியார்க்கு ஆளென்னை'' -- என்றநம் 
தொண்டர் அடிப்பொடி சொன்ன திருமாலை 
அண்டினார்க் கெங்கள் தலை.

அத்தாணிச் சேவகத்தில் பொதுவானது நழுவும் :

ஆற்றல்,பெண் பாலர்தம் கூச்சம், சுயத்தனம் 
பற்றறுப்பான் தாள்பற்றும் ஆறதிலாய் -- நிற்றார்க்கு ; 
அற்றபற்று நோற்றுப் பெறல்விழை தொண்டதூம்  
மாற்றமில் சேவகத்தே வல்.   

அரங்கனுக் கருள்மாரி :

செல்வார்க்கு செல்லிடம் காஞ்சி! வரதனே
எல்லாமா கொள்வார்க்கு வேழமலை -- அல்லாது
நில்லாது நெஞ்சம்; அரங்கனும் வேண்டிட 

நல்குவான் நின்ற இடம்.

தயா ஸிந்து :

இனிஓர் விதிசெய்ய வேண்டாவே! நன்மை 
தனையார் விரும்புவார் அன்னார் -- அனைவர்க்காய் 
சொன்னதாமவ்  எட்டெழுத்து மந்திரத்தை சக்கரத் 
தான்பொறி ஒத்தி உணர்ந்து.

பிராபிக்கையில் முந்தி இருத்தல் :

பாபமவை கண்டு பொறாதானைப் ஒப்பிவித்துக் 
கோபக் கனலை கருணையாம் -- அப்பது
கொண்டு பொறுப்பிக்கும் அன்னை நமக்கு 
உண்டாய் திருந்த விரகு.

பிராப்யமாய் முடித்தல் :

உண்டது கொண்டு விலக்காதே தம்மடியார் 
தொண்டதில் மண்டும் பயனது -- அண்டும்; 
கொண்டல் அனைய இராமானுச வள்ளல்தாள் 
மண்டினார்க் குண்டோ அயல்?

துவய  மஹா மந்திரம் :

பதமாறும்  கண்டம் இரண்டுமென சீவர்க் 
உதவிடும் மந்திர ரத்னம் -- அதைஒர் 
குருவழி பெற்று திருநா ரணன்தாள் 
ஒருமுறை யுற்றாள்  அவா. 

நவவித சம்பந்தம் நல்கும் நாயகி :

நமக்கும் அவனுக் குமாம்அச்சம் பந்தம்
உவக்கும் படியமை ஒன்பதும் -- மேவிக்கும்
அன்னையர் எண்மரோடு அல்லிக் குளத்தணை
முன்னையா ளுக்கெம் வணக்கு.

பக்தபக்ஷபாதம் கேடல்ல மாடு :
உதங்க பிரச்னத்துக் குத்தரம் நீடா
சுதந்திரன் பத்தரவர் சார்ந்தே-- உதகலதும்
வேண்டுதல் வேண்டாமை இல்லாதான் வாழ்பண்பும் 
கொண்டாடப் பாற்றக் குணம்.

341. மங்களாசாசனத்துக்கு பலவியாதி  அதுவே :

வாழிவாழி என்றேத்த வாய்க்குமத் தொண்டதும்
கேழில் பயனாம்; பிரிதொரு -- சாழல்
இலையாய அவ்வடிமை தானும் பணிசெய்
தலதேல் சீவியா பண்பு.

துவய மஹாமந்திரம் :


பதமாறும் கண்டம் இரண்டுமென சீவர்க் 
குதவிடும் மந்திர ரத்னம் -- அதைஒர் 
குருவழி பெற்று திருநா ரணன்தாள் 
ஒருமுறை யுற்றாள் அவா


திருப்பாவை சாரம் :
அவதாரிகை :

நாம் (தேஹாத்மாபிமானிகள்)(Knowing & realization):
ஒன்பது வாயில் ஒளிமதிக் கூரைவேய்
பன்முகப் பற்றுடை இத்தேகம் -- துன்பத்
துறை கோயில் இஃதின் பிறிது உயிர்என்
உறைப்பில் உணர்வு பழுது.

பர்வத பரமாணு ஓட்டை வாசி:


அதுஅறிந்தார் காண்முனிகள் ஞானத் துயர்வால்
பதுமத்தாள் மால்காதல் மிக்க -- மதிநலத்
தாழ்வாரின் ஒக்குமோ? மங்களத் தோங்குபெரி
யாழ்வாரின் ஆமோ அவர்?


எடுத்துக் கழிகிகத் தோதில்லை:


அப்பெரி யாழ்வாரும் தம்மகளார் ஆண்டாளுக்
கொப்போ எனப்பேசில் அன்றுகாண் -- தப்பாது
நம்மைத்தாள் சேர்த்துமாலுக் காட்படுத்தும் ஆசான்வாய்
தம்மையவள் முன்நிறுத்த லால்


ஆண்டாள் அநுகாரம் பள்ள மடை:


பிரிவும் பயலமையும் மீதூர காதல்
தரியா மடவார் திருமால் -- கருமமவை
தம்பால் ஒருவாரு ஏரிட்டு தாழ்த்தல்தாம்
தேம்பாநீர்ப் பள்ள மடை.


பகவத் ஸம்ஸ்லேஷ இஜ்யா :

துய்த்தபின் நீராடல் சிற்றின்பம் மாலன்பு
துய்ப்பதாய் நாடி அவனடியார் -- மொய்ப்ப
மடந்தையர் ஆங்கவ னோடு உடன்கூடத்
தேடல் சுனையாடல் நோன்பு.

பிரபந்த தாத்பர்யம் :

பாவையர் நோன்பு பனிவிழும் காலையில்
பூவையர் கூடி இடைச்சேரி -- ஆச்சியர்
கண்ணனைக் கண்ணாளம் தான்கட்டி கால்பிடிக்க
எண்ணம் உணர்த்தாம் பொருள்.

மந்திரத்தை :

எட்டெழுத்து தொட்டுணர்த்தும் உட்பொருள்தான் மற்றயார்க்கு
எட்டாதான் கால்பற்றி நிற்றார்கு -- கிட்டும்
படியாற்றும் கைமுதலும்  காண்பயனும் நாரணனே
கோடும் சுனையாடல் புக்கு.

மந்திரத்தால் :

செய்தவேள்வி சிந்தை யராய்அவன் செய்வன
செய்து கொளாதே பதரியுதவச் --  செய்வான்
விரதமதில் வேண்டிற்றும் வேண்டாதும் கொண்டு
உறங்குவான்போல் யோகுசெய்வான் ஏத்து.

351. மறவாது என்றும் வாழுதியேல் வாழலாம் :

தன்அலாத தன்னதாக்கை தான்திருட்டு; மேன்உடைமை
அன்னதை யானுடையன் யான்உரியன் -- என்னுமது
பஞ்சம்; உரியஉண வாகவுண்ணா மைப்பிணி
விஞ்ச வளர்ந்தான்பேர் ஒது.

விதேயனான பர்ஜன்ய தேவதைக்கு கையோலை :

உலகம் படைத்தவன் கையடக்கம்; உன்னி
உலகம் படைக்கும் இறையோ -- குலவு
மவன்மந் திரத்து அடக்கம்; அதுவும்
உவந்தவந்த ணர்தெய்வ மாடு.

பிரம்ம ஞானப் பிரபாவம் :

இறையறிவாம் மெய்யறிவுத் தீயினுள் பாபம்
இரையாய் உருமாயும் மற்று -- அறியாப்
பிழையவையும் தாமரை தன்இலைமேல் நீர்போல்
இழையவொட்டா தேபோம் அகன்று.

அனுபவித் தேயற வேண்டுமாம் பாபம்
அனுபவி யாதவை மாயல் -- தானுமென்
என்னில் நெருப்பினை நீர்தணித்தல் போல்கருணை
முன்னால் கருமம் விலகு .

மாடுகன்று ஒன்றின்றி பாலர் களும்ஒளித்தான்
மொட்டவிழ் தாமரை மேலான்தான்; -- தேடல்வாய்
அவ்வவையாய் தானாகி மாயனே மாறல்போல்
எவ்வெவையும் தன்னுள்ளாய் தோற்று.

பொதுக்காரணி சிறப்புக் காரணி ஆகாவகை :

நீரால் நிலமால் ஒளியால் விதைமுளை
காரணிதான் ஆக்குமோ அவ்வகை -- பாரில்
அவரை துவரை என;தீதும் நன்றும்
அவரவராக் கம்மற்  றில.

ஜகதுபாதான காரணம் பிரஹ்மம் :
மாடுகன்று ஒன்றின்றி பாலர் களும்ஒளித்தான்
மொட்டவிழ் தாமரை மேலயனும் -- தேடல்வாய்
அவ்வவையும் தானாகி மாயனே மாரினாப்போல்
எவ்வெவையும் தன்னுள்ளாய் தோற்று.
பாலே மருந்து :
அடிஇரண்டும் காப்பு இனிமை அடியார்
படிஎன்றால் அம்மால் அவனின் -- படியும்
அதுவே! பிடித்துச் சுவைத்து சகடம்
உதைத்து நடத்து மவன் .
அகவிதழும் புறவிதழும் :
உள்நாட்டுத் தேசு உடன்கூடி செய்அடிமை
வள்ளல்மால் வானோர்தம் நாயகர்க்கு -- உள்ளத்தே
உள்ளாம் உயிர்தன் நிறம்பெறலும் மேல்நாடாம்
கள்ள உடலைக் கரந்து .
361. ஸககார நிரபேக்ஷோ உபாயம் :
இராக்கதர் தின்ற உடல்காட்டி வந்து
அறிவிப்பார் தாங்களாக ஏபரமே! -- சேர
வரும்நம் வீடணற்கு இக்கரை போந்த
பரமாவா என்னும் அது.
உபாய அத்யவசாயம்:
தன்முயற்சித் தான்ஏது மின்றி அவன்கையே
தன்உயர்த்திக் காம்பழு தில்உபாய -- மென்பயிற்றுச்
சோம்பிக் கிடப்பார் உறவும் அபிமானம்
நம்பி ஒருபா இரு.
ஸ்வகத ஸ்வீகாரம் நம்நிலை :
சேயன் எளியன் திருமா மகள்கேள்வன்
தூயவின் நாமம் பலபலவும் -- வாயின்
மொழிதல்மால் தன்னை அணைந்துகால் கட்டும்
வழியதாய் நாடல் கடை.
பரகத ஸ்வீகாரம் ஆழ்வார் நிலை :
நோன்பும் நியமும் தன்முயற்சி கோலுவார்
அன்றியருள் ஞான விளைநிலமாம் -- என்புடல்
கூடவேர் பற்று கழற்றாதார் போலாழ்வார்
நாடும்மால் அன்றோ வழி.
சித்த சாதன நிஷ்டை :
பலன்கரு தாது முயல்வார் இலையாய்
நலன்வேண்டின் நாமியற்றல் கூடும்!-- சொலப்புகில்
மாலோலன் தம்முயற்சி கோலாதார் அம்முயற்சி
தோலா வகையார் செயல்?
கருமம் கைங்கர்யத்தில் புகும் :
செயலொன்றும் நம்மால் பயன்மூன்று நீடும்;
உயப்படு நேர்பயன் போல்துணைப் -- பயன்,காணாச்
சூழப்பயன் என்றிவை கோலா கருமத்
தெழுபயன் மாலவன் தொண்டு.
யாதாத்மிய ஞான விகாசம் :
செயல்அறிவு பக்தி திருத்தாள் பரிவிவைமேல்
மேயகருமம் நான்கதூம் மால்தொண்டு -- தூய
உயிர்பால் மிளிர்வவன் இட்ட வழக்கென்
துயக்கித் தனைத்தான் நீடு.
அத்தாணிச் சேவகத்தில் பொதுவானது நழுவும் :
பிராட்டி ஸ்வசக்தியை விட்டாள் .
திரௌபதி லஜ்ஜையை விட்டாள் .
திருக்கண்ணமங்கை ஆண்டான் ஸ்வவியாபாரத்தை விட்டார்.
இப்படி உபாயத்துக்கு அதிகாரிகளான பிராட்டியும், திரௌபதியும், திருக்கண்ணமங்கை ஆண்டானும் போலே
உபேயத்துக்கு அதிகாரிகள் இளையபெருமாளும், பிள்ளை திருநறையூர் அறையரும் . சிந்தையந்தியும் ஆவர்.

இவர்களின் அவஸ்பேயாக்ஷிதங்கள் :
பிரியில் தரியாமை .
தன்னைப் பேணாமை .
ஏவிக் கொள்ளவும் வேணுமாம்.
ஸது நாகவர ஸ்ரீமான்;
அந்தரிக்க்ஷ கத ஸ்ரீமான்;
லக்ஷ்மணோ லக்ஷ்மி ஸம்பன்ன:
என்றிருக்கிற உபேயத்துக்கு அதிகாரிகளின் அத்தாணி சேவகத்தில், பொதுவானது நழுவும். அவர்களுக்கு ஸ்ரீமத்வம் அதுவே.
ஆற்றல்,பெண் பாலார்தம் கூச்சம், சுயத்தனம்
பற்றுப்பான் தாள்பற்றும் ஆறதில் -- நிற்றார்க்கும்;
அற்றபற்று நோற்றுப் பெறல்விழை தொண்டதூம்
மாற்றமில் சேவகத்தே வல்.
ஆற்றல் - ஸ்வசக்தி
பெண்பாலர்தம் கூச்சம் - ஸ்த்ரீத்வ தனமாகிற லஜ்ஜை
சுயத்தனம் - ஸ்வ வியாபாரம் என்றிவை
பற்றறுப்பான் தாள்பற்றி நிற்பார்க்கு - உபாயத்தில் தீக்ஷித்தவர்களுக்கு
தூற்றதாம் - நிக்ருஷ்டமாய் விடத்தக்கவை.
அற்றபற்று நோற்று - ஆகிஞ்சின்ய அநன்யகதித் வாதிகளை முன்னிட்டுக் கொண்டு வகுத்த சேஷி பக்கல் பண்ணின சரணாகதிக்கு அனந்தரபாவியான
பெறல்விழை தொண்டதூம் - பிரார்த்தித்து பெறவேண்டிய ஸகஜ தொண்டுதனை
மாற்றமில் - ஸமிக்ஞா சூசித ஆக்ஞா ரூபேண /அதவா/ அவன் புன்சிரிப்புக்கு உசிதமாய்
ஏவல் - சேஷித்தானும் தன்முகப்பே ஏவி
சேவகத்து - பணிகொள்ளவேண்டும்
என்ற இத்தால் ''அருள்பாடிட்டு ஸ்ரீகார்யம்'' கொள்கையாகிற அவன் மதித்த கைங்கரியம் செய்யப்பெற வேண்டும் என்கிறது. அதுவும் ''இறைவா நீ தாராய் பறை'' என்பத்துக்குச் சேர நாமுகக்கமது அன்றி அவனும் நாமுமாய் உகக்குமதும் அன்றி அவனுக்கப்புக்காகவே அமைய வேண்டுமாகிற அனுபந்தம் இதிலே அடங்கும்.
மரணாந்தாநி வைராணி :
(பகவத் பிரவிருத்தி விரோதி ஸ்வபிரவ்ருத்தி நிவிருத்திஹி சரணாகதி).
இறந்தபின் நம்பால் அவன்செய் விரோதம்
துறந்தானாய் மாயும் அதுவால் -- உறவினன்நீ
செவ்வே கருமம்செய் வீடணா! என்பணித்த
அவ்வே விலக்காமை காப்பு!
பாகவத ஸமிர்த்தி :
தன்னடியார் நோக்கி அருள்வான் அரங்கனார்
முன்னடி போக்கியவர் பின்நடக்கும் -- அன்பனவன்
 சூழ்த்தொடையல் காணாக்கண் பாழ்த்தமுகத் துப்புண்;
தொழாக்கை யன்றுலக் கை .
பாகவத பரிபூர்த்தி :
அடியார் அவர்பழிப்பும் தம்பால் கொடையாய்
நுடியா தவைஇசைவார்க் கன்றோ? -- ''கடியார்
துளப முடியார் அடியான்'' எனுமவ்
வளப்பம் உடைத்தாய் முடிந்து.
371. விஷ்ணுநா வியபதேஷ்டவ்ய :
கிராம குலாத்தி பரிமாற்றம் வேண்டாதே
''இராமா நுசன்தன் அடியானென்'' -- கூறு
மொழியே உகந்து உபசரிப்பார் நாடி
வழிபடலே மாலின் உகப்பு.
குருபரம்பரையை விடுத்த த்வயாநுசந்தானமும்
தேவதாந்திர பஜனத்தொடே ஒக்கும்:
குருமார் நினைவு இறையுணர் முன்னம்;
திருவார் பரிவும் அவர்சேர் -- நெறியாய்
மறைசேர் பயன்வாய் துறைசேர் சரண்தாள்
முறையார் முயல்வார் குறித்து.
வான் இளவரசு வைகுந்தக் குட்டன் :
(போக, போக்கிய, போக்த்ருத்வம்)
ஆடரவின் சூழ்தொடையில்; புட்சிறகான் வீழ்நிழலில் ;
வீடுலகில் சேனாநி சேண்பிரம்பின் -- ஆடுவான்
 வாழ்முதலாம் நம்மின் உயிர்முதலாய் விண்ணுளார்
சூழ மகிழ்முதலாம் ஆங்கு .
புருஷம் கரோதி புருஷகார :
தேவன் ஒருவன் குறியது கூறிடில்
மேவல் முடியல் இடையே -- சுவைத்தல்
வியன்பட யார்செயல் தெய்வமவன் நம்பால்
இயல்பினன் செய்வாள் திரு.
சோர சதுஷ்டயம் :
கன்னக் களவு கொளுவார் நால்வராவார்;
தன்னை உயர்த்தி படைத்தவன் -- தன்னை
அவரனாய் இன்னும் குணமிலை கீழ்மேல்
அவனதில்லை என்பார் அவர்.
அவாப்த ஸமஸ்த காமத்வம் :
இதைவிட ஈது எனவாய் மிகைப்படா
யாது முடிவோ அதுவீடு -- அத்தை
அடைய அனைத்ததன் இன்சுவை கூடா
அடைவார்க்கு காமம் முடிந்து.

பகவத் பாதோதகம் பாவநம்;
பாகவத பாதோதகம் ஸுபாவநம் :
காயசுத்தி ஆறின் வருநீறு; ஆன்மசுத்தி
பாயும் சடைச்சாறு ஆஅதன் -- மேயபால்
 சாணத்தின் சாறதனின் தூயதே மாலடியார்
மாணத் திருவடி சாறு.
குணபால மத யானை :
ஈட்டிய புண்ணியம் பெற்றாலும் கிட்டுமோ?
மட்டில் பெரும்பாபம் செய்வானைக் -- கூட்டுமோ?
பட்டத்து யானை செயுமவை ஆராயும்
திட்டத்தோ? எற்றாவன் யான்?
கடக்க கிருத்யம் :
தன்வழி தானும் வருவானை நேர்படுத்தி
நம்வினை போக்கி அடிசேர்ப்பாள்; -- மன்கருணை
மாயா வகைதிரு மால்குணம் காப்பளாம்
தாயவள் தம்கருணை காப்பு.
பாரதந்திரிய, அநன்யார்ஹத்வங்கள் :
பெற்று மறந்து முடிந்து பிழைக்கலாம்
பாற்று பிராட்டி தனைராமன் -- தூற்றின்வாய்
கானகம் போக்கினும் அன்னை முடிந்திலளாய்
வானகம் வேட்டா திருப்பு.
381. உபாய ஸ்வபாவ ஸ்வரூபம் :
தாமரையாள் நோக்காமால் தான்கார்யம் செய்வானேல்
கோமான் இறையாண்மை கொத்தையாய் -- தமர்அது
மெச்சும்? அவள்வேட்ட ஈதல் நிறமாய் (ஸ்வபாவம்)
இச்சை உயிராம் (ஸ்வரூப) குணம்.
ஸ்தூணான் நிகனந் நியாயம் :
அன்னை அருளால் அடியான் எனவாகித்
தன்னை அடைந்தார்க்கு ஆங்களித்த -- பின்னை
பிழையது ஆகா வகையே குறையங்
கிழையா தலுங்குவார் கோல்.
குணகோடியிலாம் தோஷம் உபாதேயம் :
குவிதல் விரிதல் இலையாய மேனி
குவிதல் மலர்தல் இவைதான் -- புனைதல்
குணமோ எனபிணக் காவார் அடியார்
அணைய மகிழ்வான் திறம்.

பக்தபக்ஷபாதம் கேடல்ல மாடு :
உதங்க பிரச்னத்துக் குத்தரம் நீடா
சுதந்திரன் பத்தரவர் சார்ந்தே-- உதகலதும்
வேண்டுதல் வேண்டாமை இல்லாதான் வாழ்குணமாய்
கொண்டாடப் பாற்றக் குணம்.
மங்களாசாசனத்துக்கு பலவியாப்பத்தி அதுவே :
வாழிவாழி என்றேத்த வாய்க்குமத் தொண்டதும்
கேழில் பயனாம்; பிரிதொரு -- சாழல்
இலையாய அவ்வடிமை தானும் பணிசெய்
தலதேல் சீவியா பண்பு.

ஸ்வரூபாநுரூபமான கைங்கர்யமேலும் பிரார்த்தித்த பெற வேண்டும் :

உன்னை  விடுத்தபிரி தொன்றை கொடுத்து

எம்மை விலக்காதே கொள்ளடிமை; -- நன்மை
நமக்கத்துவால் வேட்டுமது ஈட்டி  உவகை
உமக்கது என்றுகொள்நாட் டே!

மாம் -அஹமின் அர்த்தம் மால் - ஆலின் இலையாலில் ஸுவியக்தம்:
கடலின் குளப்படி எற்றோ நெடியமால்
மாடுடை மாலின் மயக்கத் -- தடங்கும்
நமக்குடைக் காதல்! இடுசிவப்பு மேன்மை;
தமக்குடை அவ்எளிமை பீடு.

முக்த போகம் :

தம்மையே தாம்தமர்க்கு நல்கி வெலவருவான்

தம்பால் எதிரம்பு பூட்டாதே -- உம்மால்
இனித்தோற்றோம்  என்றிருப்பார் பக்கல்தாம் தோற்பார்
நனிநல்கல் முக்தபோ கம்.
தன்னைப்போல் ஊரும் நாடும்:
இறையுள நற்குணம் குற்றமிலாப் பண்பரேனும்
யாரே குவலயத்தில் யாதும் -- குறையிலார்?
புண்ணியன் கண்ணன் நண்ணி இருப்பார்க்கு
திண்ணமனி இல்லை அவா!
தனக்கேயாய் எனைக்கொள்ளு மீதே :
அடிமைக்கண் ஆனந்தம் தன்னதன்றி தேவன்
படியாய் இளவல் இருவர் -- அடிமையும்
நீடு மிடத்துமே அத்தலைக்கு ஏற்புடைத்தாய்
நாடும் நமக்காதல் பின்பு.

391. தன்னை முன்னிடுவாரை தான்முன்னிடுகை ஸ்வரூபம்  :
அனுகரித்து சொன்னவை ஒன்பதோடு ஆன
பனுவல் இருபத்தும் தானாய்க்  -- தனித்துப்
பணித்த நெரவலொன்றும் கோதைதன் பாவைக்
கணியாதல்  ஆழ்வார்முன் னிட்டு .

சாத்திய விளைநிலம் சரீரம் :

தன்னைத்தான் நேசியாதார் உண்டோ? பொருளில்,மின்
பொன்னில்தான் ஆசை இலையேனும் -- பெண்ணில்
புதல்வரில் நிற்ற நசைஅறுனிம் உற்றதன்
பூதவுடல் ஏசல் இலார்.

கிட்டி அட்ட விட்டார் முட்டாள் :

தன்மேலாம் ஆசை உடலோடே தாம்மடியில்
என்னாம் பிறவி பெறும்பயன்? -- மின்னின்
நிலையில மன்னுயிர் ஆக்கையால் விண்ணோர்
நிலையதை எய்தற்க மற்று.

பகைவர்க்கு அருள்செய் பரமே !


நமக்கின்னா செய்ப்பவர்க்கு நம்பெருமாள் விம்மி 
அவர்கின்னா செய்வான் எனவால் -- நமர்கன்னார் 
செல்த்தீங்கு நாமெண்ணல் உண்டோ? கூரேசர் 
போல்பகைவர் பால்இரங்காய் நெஞ்சு!

நமக்கின்னா செய்ப்பவர்க்கு - 'உண்ணும் சோறு, பருக்கு நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்', 'கிருஷ்ண நாதா: கிருஷ்ணாஸ்ரயா: ஸ்ரீ கிருஷ்ணப் பிராணா:' என்று இருக்கிற ஆழ்வார் போல்வார்களை அவலம்பித்திருக்கிற அஸ்மாதாதிகள் விஷயத்தில் அசக்ய பாவத்தோடே காரணமின்றி துவேஷத்தோடே இருப்பவர் பக்கல் ;
நம்பெருமாள் - 'ஸகிருத் ஏவ பிரபந்நாயா தவாஸ்மி இதீச யாசதே , அபயம் ஸர்வ பூதேப்யோ ததாம் ஏதத் விரதம் மம' என்று ஒருமுறை காலில் விழுந்தவர் விஷயத்தில் பூத, பௌதிக, தெய்வாதிகளால் வரும் எந்த ஒரு ஆபத்தையும் போக்குகிற அவகாச நிரீக்ஷிதனாய் இரண்டாற்றின் நடுவிலே இருக்கிற நம்பெருமாள் ;
விம்மி அவர்கின்னா செய்வன் - பிரஹ்லாதனுக்காக வந்த ஒரு நரசிம்மனாக, தன்னை வீழ்த்த முடியாது தவித்த இராவணன், தன்னை யுத்தகளத்தில் சுமந்து நின்ற ஹனுமான் மேல் சரவர்ஷம் வர்ஷிக்க, 'கோபஸ்ய வசமே இவ ' என்று கோபத்துக்கு அருளப்பாடு இட்ட இராமனாக , தனக்கு ஒருவரும் விரோதி இல்லை ஆயினும், தன்அடியார் விரோதிகளை தன்விரோதியாகக் கொண்டு பொங்கி புறப்படுதாலிகிற
எனவால் - ரக்ஷணத்தை நிரீக்ஷித்தவனாய் அவ்வெம்பெருமான் இருக்க
நமர்கன்னார் செல் தீங்கு - எமன்வாயில் அந்த நம்முடைய விரோதிகள் விழவேண்டும் என்று
நாமெண்ணல் உண்டோ - ஆசௌசமான அந்த தாழ்ந்த எண்ணத்தை ஏறிடுவார் அல்லவே?
கூரேசர் போல் பகைவர்க்கு - பகவத் இராமாநுசர் மேல்நாட்டுக்கு எழுந்தருளவும், தன்னுடைய கண்கள் இரண்டும் போகவும் காரணமாக இருந்த நாலூரானுக்கும் வீடு பேற்றை விழைந்த கூராத்தாழ்வான் போல பகைவர்கள் இடத்திலும், தங்களுக்கு வரும் இன்னல்கள் தமக்கு கர்மாதீனமாக ஏற்பட்டது, எய்தவன் இருக்க அம்பை நோவான்என் என்கிற கணக்கிலே வசா, மனசா, கர்மணா ஒரு தீமையும் ஆஸாஸிக்காத சகஜ இரக்கத்தோடே வர்த்தித்தலாகிற ;
இரங்காய் நெஞ்சு! - 'அவர் நாண நன்நயம் செய்து விடல்' என்றாப் போலே, பொறையும், கிருபையும் கொள்வாய் - என்று தன் நெஞ்சுக்கு உபதேச மாக்குகிறர் இந்த ஸ்ரீசூக்தி யாலே.
பொறையாவது - ஒன்று செய்தாற்கு இரண்டு விளைய மீதூறி நினையாமை. கிருபையாவது - பாகவதா பசாரமுகேண பகவன் நிக்ரஹத்துக்கு ஆளாகி, இவனுக்கு நரகம் சம்பவிக்குமே எனஇரக்க புத்தியோடாகல் உயர்ந்த ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷணம். இது எளிதில் வராது. எண்ணம் முயற்சியின் பால் இருக்கட்டும் என்று ஸ்வநியந்ரணா பிரயத்னமாக அவதரித்த பாசுரம் இது என்று கொள்க

உபாய உபேய ஐகமத்வம் :


நெறிவாசல் தானாய் இவன்முயற்சி வேண்டா
அறிவொடு தன்கையே தேடல் -- முறையா
விரும்பும் தகைவீ டளிக்கும் இயல்பாம்
திருமால் திருவுள்ளம் தேடு .


மாயனார் ஒய்(வு)வீடு :

காடுமேடு அன்று நடந்தகால் கள்கழனி
மோடுதேடி சென்றதோ? கச்சிநகர் -- மாடநீடு
ஆளரவம் நிச்சலும் எச்சுத்தா தென்னேரி
மீளவரும் மால்விடாய் ஆற்று.

விபவத்துக்கு எல்லைநிலம் அர்சை . 
மால்கருணைக்கு எல்லைநிலம் இராமானுசன்.

இராமா நுசனாம் பலமதகு ஏரிநீர்
மாறாத மால்கருணை மன்னுலகில் -- சீரார்
பெருஞ்செல்வம் என்ன உலகோர் உழிதர
ஏரிகாத்த ராமன் அருள்.

நம்கடன் தீர் வேங்கடம் :

நேமியான் நாமம் நிமிர்வேங் கடத்தான் !
சேமநல் வீடுசேர் ஆகத்தாள் -- வாமத்தான்!
தூமலர் போகத்தான்! தொழும் அடியார்தம்
காமம்தான் கூட்டும் விரைந்து.

பந்தல் படரவாகும் சுள்ளிக்கால் :

கடைவாழ் துறவிக்காம்  வீடதை மால்தாட்
கடைவாழ்  எவர்க்குமாக்கி  விண்ணின் -- கடைநின்று  
வீடளிக்கும் ராமா நுசனை  தடையின்றிக் 
கூட அவனடியார் நாடு.

தன்னில் பேருதவி அவன்தாள் :

தெய்வம் மகனாக வந்தும் தயரதன்
எய்தலா வைகுந்தம் பொய்கலவா -- வாய்மை 
யினான்அத் தருமனும் போகாப் பெருநகர் 
தானாய்த் தரும்தாள்சேர்ந் தார்க்கு .

பக்தானாம் துவம் பிரகாஸசே :

401.கூவி அழைப்ப கலுழன்மேல் தேவியுடன் 
தாவி இழைத்த மணிமுடி -- மேவநம் 
ஆவி தழைப்ப அருளொடு தோன்றுமால் 
காவல் ஏழை எமக்கு .

ஆகாசாத் பாதிதாத் தோயம் :

உள்ளங்கை நாயனார் என்று மதாந்திரத் 
துள்ளல் படவிருந்து பின்வெள்ளை -- உள்ளத்த
வள்ளல் இராமா னுசமுனி வாய்இசைந்து 
கொள்ளும்பூ பூசனைமா லுக்கு.

கொக்கு வாயும் படுகண்ணியும் : 

இரண்டெழுத்து கொண்ட ஒருபேராம்! செல்லுயிர் 
வாரும்படி நின்றாளும் ஆயிரம் -- பேரும் 
இதற்கு நிகராம்! அணைமனம் மீள்கலா 
பாதற்கு விண்டகல்வ தில் !

கருணை இல்லையல்லதோர் கண் :

பாக்கியம பூர்வமென இன்னொன்று ஏற்றிநீர் 
நோக்கிட வேண்டா! நமைநாளும் -- காக்கிற 
தொன்றே கடமை எனமால் உடனிருப்ப 
நன்றவன் தன்கருணை எண்ணு .

தத் விஸ்ரம ஸ்தலி :

தயரதன் தன்மகனாய்த் தோன்றி ஒருபா 
டயர்ப்ப இருவர் மகனாய் -- முயன்றும் 
இளைப்பே ! கலியில் இனிசெல்வப் 
பிள்ளை 
இளையாழ்வார்க் கான பொலிவு.

பொய்ப்பார்க்கு பொய்கலா மெய்யன் :

பிரமம் குணமில் எனமொழிவார் பொய்ப்ப 
இராமகாதை கற்பார் கருத்தும் -- பரமனவன்
பண்பும் உருக்கொள் தருமம் பிறந்துசெய்
அன்பும் அறனும்போல் யாது?

பங்குனி உத்திரம் :
தன்னைப்போல் இன்னொருத்தி உண்டாகில் அங்கேயே
பின்னும்நீர் செல்லும் இனியுமக்கு -- மன்னே!நாம் 
அல்லோம்; கழகமேறேல் என்று கதவடைப்ப
நல்லாழ்வார் கொண்டங் கிணைந்து.

கடக கிருத்யம் :


இணைந்த இருவர் மணமாம் தருணம் 
துணைநமக்கு என்று திருமால் -- இணைத்தாள் 
சரண்புகுந்த நம்மி இராமா நுசனை
சரணடைவார் செவ்வேயாள் பேறு .

நல்லாரோடு இணங்கு :

அறியாவக் காலத்தல் லாதார் இயைந்து  
நெறியல்லா தாற்றல் பழுது! -- முறையாய் 
அறிவுடையார் அண்டி அதற்குயவே நோற்ப 
பொறிமாட்டு பஞ்சன்ன மாய்ந்து.

அழகுக்கு மறுபெயர் திருமால் :

கையில் பிடித்ததோர் வில்லும் கணையும் 
மெய்யில் பரக்கவே சாற்றிய -- நெய்தவெண் 
கச்சும் கவரி முடிக்கெழில்சேர் பொன்முடியும் 
அச்சோ இவரழகார் பெற்று?

விளைநிலம் சேர்வித்து முளைக்கும் :

411. சச்சம் பிரதாயம் தேர்ந்த குருவவர் 
சிச்சன் எனவான பின்பு,நும் -- இச்சையால் 
அண்டின ஆசான் உயர்வும்நும் தாழ்வுமே 
கொண்டு பிரமனவன் நண்ணு.

பாலே மருந்து :

காலாழி பொன்மணியும்! தண்டை சதங்கையும் !
பாலாழி பைந்நாகத் தவ்வரங்கன்   --  கையாழி 
வெண்சங்கும் நாந்தகமும் கண்டக்கால் நல்விருந்தும் 
ஒண்மருந்து மாம்நம்  வினைக்கு.

ஊடல்வாய் உஞற்றும் மடல் :

மடல்பிடித்த கையன் கழல்பிடித்த ஐயன் 
தடத்திணைக் கையில் பிடித்து -- இடுக்கியதும் 
என்னோ? திருமால் அடி''கதி'' என்றுதாம் 
சொன்னசொல் கத்யமாய்த் தன்னோ?

கோல் தேடியோடும் கொழுந்ததேபோல் :

பூமுடியும் பொன்வடமும்  பாங்கான தோளிரண்டில்  
தூமலர் தாழ்சரமும் புத்தாடை -- தாமணிந்த 
போகப் புதுக்கணிப்பும் நம்மிரா மானுசா!
ஏகமெண்ணும் என்றன்  மனம்.

தேரினில் சொன்னவன்சொல் பாரினில் பரம்பெவன் செயும் :

கண்ணன் வழிகீதை! ஆழ்வார் அவர்மொழிந்த 
பண்ணார் தமிழ்ப்பாடல்  நாலுக்கும் -- அண்ணல்
இராமா நுசமுனி பண்ணியநூல் ஒன்பதும் ஆமே 
விராவு  விளக்கம் அவைக்கு.

அடி உதவுதல்போல் அண்ணல் உதவான் :

உய்ய ஒருவழி நம்முடைய வர்துய்ய 
செய்ய திருவடி! ஐயநீர் -- பொய்யா 
பிடிக்கிலும் மெய்யா உதவிடும்! மாயோன் 
கடைக்கண் செய்யா படிறு.

முமுக்ஷுவுக்கு முத்திரம் :

எட்டெழுத்து மந்திரம் தந்தனக்காய்; ஆறுவார்த்தை
கட்டிரண்டாய் சொன்னவார்த்தை அன்னையும்-- விட்டு
பதத்தே மடியமர்ந்து கேட்டாளால்; போர்க்களத்து
கீதையும் ஓத்தின் முடிவு.
குருஹார இஷ்டி :
மணவாள யோகி திருமலை ஆழ்வார்
பணியுலோகா சாரியர் நம்பிள்ளை -- பூணும்
குருஹார பங்க்தி அதனுள் திருமாலும்
நேரெதி ராசர் நடுவு .

நாச்சியார் கோலத்தில் எதிராசர் :

தலைவிதாய் தோழி எனஆழ்வார் செய்த 
அலவல் அதுகண் டிரங்கா -- அலவலன் 
மாலை கடியன் கொடியனென்ன வாளை 
போலை எதிராசர் எற்று?

இராமானுசன் போந்த பொலிவு :

ஜகம்புகழும் ராமா நுசன்மித்யா வாதம் 
ஜகமிதில் நீறுசெய் தோய்த்த -- ஜகதுள 
வாத கொடைவள்ளல் ! முக்திநல் ஞானம்
பொதுவாக்கி வீடுசெய்வான் போந்து !

இரவிமுன் மின்மினி ஆடவோ?

421. இரவிக் கதிர்இருளைப் நீக்குமிறை யன்பர்
உறவும் அணுக்கமும் சித்தம் -- நெறிபட
நல்குமேல் ராமா நுசனடி சீயாக்கள்
மல்கவொழி யாவோ மருள்?

வானேற வழிதந்த வள்ளல் :

பாஷ்யகார் எண்மரோடு காண்ஒருவர் கோள்கள் 
விஷயமாம் ஆதவன் தன்னொடு -- அஷ்டம 
கோசார வாழ்பலன் போலா பரமபதம் 
போய்சேர அஷ்டாங்க சித்து.

அபவாத கண்டன மார்த்தாண்டன் :

பொய்என்றும் சூனியம் மாயையே என்றிவ்வோ 
வாய்மை அலாத சிலர்கூற -- பொய்த்தான்அப் 
பொய்யுரை யாவும் இராமா நுசன்வந்து 
மெய்யுரை செய்வான் மறைக்கு.

குரு மந்திர பரிபவம் கருணைக்கு விலையலவே?

ஏழைஎம் சொல்ஏறும் கொல்?கிளி தாவிய 
வாழைசேர் சோலை அரங்கன் -- புழல்வாவி 
முற்றத்துக் கொவ்வைவாய் கோகிலங்கள் இன்சொல்ஆழ்ந் 
துற்ற எதிதன் செவிக்கு?

அடிகொட ஆசான் படி :

இரும்நாள் எமக்கு உலகிதில் இன்பம் 
தரும்திருமால் பக்கல் சலியாப் -- பொறிவாய் 
வலம்தரும் எந்தை எதிராசார்க் குற்ற
நலந்தரும் நாமம் கற்று.

பயனில கூறேல் :

இன்சொல் இகழ்தல் இலாமென்சொல் உண்மையாம் 
அன்னசொல் ஆகிலும் நன்மையிலா -- என்றறிய 
பின்னை அவையத்து முன்சொலா தென்றிலாத 
என்ன பயனும் இல.

உள்ளக் கிடக்கை :

பொறிஐந்தும் சேர்புலன் பத்தும் இதய
அறையும் திருத்திப் பதியவைத்தேன்! -- மாறில்
பெருமை இறைவ! பதித்தபின் நீக்கம்
உறாதிருந் தெம்மைநீ யாள் !

அழகழிக்குமழகு :

அகரத்தில் ஓர்நாள் அருளாளர்க் கென்று
புகர்சேர் விழவில் எமைத்தோர் -- அகம்பனிப்ப
முத்தங்கி சேவைதான் தூரிகை கொண்டெழுது

சித்திரத்து மேவா வழகு.

பிரதம பிரவிருத்தி ஸ்வாதந்திரியம் :

கூத்தாட் டவன்கையில் பொம்மைநாம் என்பரவர் 
சித்தம்தம் பால்வைத்தென்? கோலாட்டி -- ஒத்தாடு 
சாகா மிருகமும் தன்னிச்சை கூட்டுங்கால் 
ஏகோ இவன்செயல்தெய் வத்து ?

பொய்சொல்லி மெய்யுறல் அற்று :

வாய்மை இலாசெல்வர்; தாழ்விடத்து தண்ணளி
செய்யார் திறத்து அணுக்கமிவை -- ஐயஎன்
சொல்ல? இடும்பையில் ஈயலாகார் மாட்டிரத்தல்
கல்லதில் நார்உரித் தற்று.

அபிமுகோ பவா :

431. திறந்தெங்கும் மாலே பரந்துளன்! தேடித் 
புறமெங்கும் வாளா அலைதல் -- துறந்து 
திருவடி சிக்கெனத் தொண்டீர்! தொழவாரீர் 
ஓரடி கொண்டு நடந்து.

பரமாத்மநியோர் ரக்த : விரக்த: அபரமாத்மாநி :

காட்டவே கண்டனே நம்காரி மாறனும் 
காட்டும் அளவேயோ வேட்டிலன் -- நாட்டமோடு 
நம்போல் உலகிதில் கூட்டிசைவே! மால்நோக்கு 
விம்ம விலகுமற்ற பற்று.

நியத விஷயம் :

கண்டவர் விண்டிலர்! நம்கண்ணன் கண்மண்டி 
அண்டினார் தொண்டாள் வதன்றேலென் -- உண்டோசொல் ?
கொண்டாட்டும் அவ்வடியார்க் கஃதாக அம்மாலே 
யாண்டும் எமக்காம் புகல்.

எளிவரவு என்னாம் இளிம்பு ?

கோலால் புடைத்தும் உரலில் பிணைத்தும்அங்
கேலா தவன்போல் இருந்தானால் -- பாலாய் 
விடமுண்ட கண்டன் சிரமேல் நிலவே!
கடமோ அவன்விட் டயல் ?

மங்கலநாண் மறைவிடத்திருப்பு :

கொண்டவன் நாமம் அவன்பெண்டு கூறுமோ?
தொண்டாய சிச்சர் தன்குருதான் -- கொண்ட 
திருநாமம் நன்றுபிறர் கேளா வகைஎம் 
பெருமானார் ஏத்தும் மனத்து!

மாறுளதோ மாலுக்கு?

பொருனை அருமை புரியாதார் உண்டோ?
பெருமை அருள்மாறன் அல்லால்என் -- வேறோ?
திருமால் கருணையில் ஒன்றுதான் ஆறு 
இரண்டுநம் ஆழ்வார்என் கூறு.

இறையாண்மைக்கு குறைவிலா இறை :

மண்ணீறு மேல்சாத்தி உம்நீர்மை மாலரன் 
வண்ணர்க்கு எண்ணீரோ என்றுநீர் -- சொன்ன
திரண்டபொருள் மாயன் அவன்மேவு சீவன் 
பரவு சிவன் உடற்று. 

திருவுக்கும் திருவாகிய செல்வன் :

தேவிமார் மூவர் திருமார்பில் கோயில்கொள்
தேவாதி ராஜன் திருக்கோலம் -- பூவில்
அமர்ந்தான் தனக்கும் திரிபுரம் செற்றான்
தமர்க்கும் உயர்வாவான் காட்டு.

புற விலச்சினை :

பன்னிரண்டு காப்பும் துளசிநல்  மாலையும் 
சென்னிமேல் கண்டு நமன்தமர் -- மன்னா 
வலம்செல்வர் என்னால் அதுவோ பெருமை ?
நலம்அவர் நோக்கால் நமக்கு.

ஈரவாடை தேட்டம் :

பூணூல்தன் சக்கரத் தோள்சாற்றி நீராட்டு 
பாணியில் நீரின் ஜடைதலைக்கு -- பூணும் பொன் 
மேனி வரதன் அவன்கோலம் காணும்யான்  
ஞானியர் வேட்டிப் பெறும்.

பத்தும் பத்தாம் இப்பத்தவதாரம் :

மொத்தமாய் ஒத்தை சிலைபத் தவதாரம் 
எத்தனைத் தோர்அழகு? சித்தத்துள் -- நித்தமுமே 
நின்றகலா உத்தமன்கை காட்டும் தத்துவம்தான் 
நன்றவன் செவ்வடி காப்பு.

441. முச்செருக்கு :

நற்குடிசேர் நற்பிறப்பு நற்செல்வம் நல்லறிவு 
இற்பிறப்பில் பெற்றார் பெறுமதம் -- மற்றுலக்கைப் 
போல்கை உளஆனைக் காம்மும் மதப்புனல் 
போலுய் வகைபாழ் தரும்

லோகாயனம் புனர் ஜென்ம தாயகம் :

பசிக்கலாது மேல்புசியல் ஈங்குள இன்ப 
வசியாதல் அஃதொன்றே நாடிநாளும் -- பேசி 
உயிர்க்குயர் ஒன்றுமே யோசியாது மற்றை 
பயிற்றல் மறுமைக்சேர் வித்து.

சப்த ராசி ஈஸ்வர வாசி :

நராயணனை நாரா யணன்என்னா தோதல்தான்
சீரோ அலவோஎன் யார்கூறல்? -- கூராழி
மாலோனை மாலென் குறைத்தாலும் அத்திருமால்
நூலாட்டி கேள்வர் உணர்த்து.
பாப ஹாரி :

முன்னவன் புணர்ப்ப முடித்தனாம் சூகரன்
தன்னை பழிகொள தான்எதிர்ந்த -- பொன்னன்
உரத்திடை கூருகிர் ஓட்டிய கோளரி
சேர அடரா வினை.


பி. வா. ப. கூடஸ்தர் :


கண்ணனவன் ஆளான மாமுனிக்கு தானடிமை
பண்ணுமெவன்? தண்வேங் கடமலை -- அண்ணல் 
அவர்திரு பள்ளி எழுச்சியருள் அண்ணா!
உவந்தெமை ஆளுமே இன்று.

அஸ்மதாசாரியன் :

தன்னைத்தான் நோக்கார் திருவடி சம்பந்தம் 
ஒன்றேமேன் நோக்கி ஒருபடி -- சொன்னால்,தம் 
சிச்சர் உயர்வேதான் நோக்கும் திருவுள்ளம் 
மிச்சா திருக்கும் இவர்க்கு.

இராமாநுச சகஸ்ராப்தி :

ஆயிரம் ஆண்டு அவர்க்கோர் கணக்கே? பல்
லாயிரம் ஊழிதோர் ஊழி -- சேயன்
எமக்காய் இகலுற்று பேராது அம்மால்
தமக்கெமை ஆளாக் கிட,

தக்ஷிணாயன ஆரம்பம் :

இடம்வல மானால்என்? மேல்கீழா னால்என்?
திடமாக பூமி கதிரவன் -- பாடே 
முயங்கச் சுழன்று மழைபயிர் மாறா
தியங்கல் இறைவ  னருள்.

உள்ளுணர்வும்-மெய்யுணர்வும்  
(Transcendence & immanence ) : 

மெய்மேல் பிறிதுள மெய்ஞானத் தோரங்கம்
தெய்வம் திருமால் அதனுளாம் -- எய்தி
அதிசயிப்ப தான்வெளி மால்உள் எனவாய்
விதிசெய் இறையுணர் வோம்பு.


450.  ததாதி வரத :

இரவாதார் தம்மின் திறத்தும் மறவா
தருளும் வரதா! குறைஎன் -- வருமே?
ஒருநாள் ஒருபொழு தேனும்மால் உன்னை
திறம்பா துரைப்பார் தமக்கு.
--தாசாரதி தாஸன்.
(அகரம்) கிடாம்பி ஸ்ரீநிவாஸ ரங்கன் ஸ்ரீநிவாஸ தாஸன்.